காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், தொள்ளாழி கிராமத்தில் 295 ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெற ஏற்கெனவே உள்ள அணைக்கட்டுக்கு கீழ் புதிதாக தடுப்பணையைக் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ரூ.7 கோடி மதிப்பில் 27 மீட்டர் நீளம், 1.48 மீட்டர் உயரம் கொண்ட புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த அணை மூலம் மழைக்காலங்களில் வெள்ள நீர் வீணாக கடலுக்குச் செல்வது தடுக்கப்பட்டு தொள்ளாழி, தோனாகுளம், உள்ளாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள 291 ஏக்கர் விளை நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெற முடியும். இந்த தடுப்பணையை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திறந்துவைக்கப்பட்ட இந்த தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.