கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கிழக்கு கோபுரம் - மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்களை சீரமைத்து, கும்பாபிஷேகப் பணிகளை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சி தொல்லியியல் துறை அலுவலகத்தை அக்டோபர் 7-ல் தேதி முற்றுகையிட போவதாக இந்து மகா சபா ஆலயப் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ராம.நிரஞ்சன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 'உலகப் புகழ்பெற்ற, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் 2-ம் ராஜராஜன் சோழனால் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலில் அடிக்கு 1008 சிலைகள் இருப்பதாகக் கூறப்படுவதாலும், கலை நயத்துடன் வடிவமைத்துள்ளதாலும் கட்டிடக் கலை மற்றும் சிலைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள், கலைஞர்கள் எல்லா நாளும் இங்கு வந்து குறிப்பெடுத்துச் செல்கிறார்கள். இத்தகைய சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில் கிழக்கு திசையில் சேதமடைந்துள்ள கோபுரம் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் உள்ளது.
» சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த மறுப்பு
» ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இதே போல், திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடியில் உள்ள நாகநாத சுவாமி கோயில் முதலாம் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்டதாகும். ராஜேந்திரன் சோழன் தனது மனைவி, குழந்தைகளுடன், நடராஜரை ஆராதனை செய்வது போன்ற உருவச் சிலை இங்கு மட்டும் தான் உள்ளது.
மேலும், ராஜேந்திரனால் விரும்பிக் கட்டப்பட்ட இந்தக் கோயிலை புனரமைப்பதற்காக, அனைத்து கட்டுமானங்களும் பிரிக்கப்பட்ட நிலையில், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த 2 கோயில்களும் தொல்லியியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
எனவே, இந்த 2 கோயில்களையும் சீரமைத்து, கும்பாபிஷேகப் பணியினை மேற்கொள்ள வலியுறுத்தியும், கண்டுகொள்ளாமல் உள்ள தொல்லியியல் துறை நிர்வாகத்தைக் கண்டித்தும் வரும் 7-ம் தேதி திருச்சி தொல்லியியல் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.