வானிலை குறித்து பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தரும் ‘டிஎன் அலர்ட்’ செயலி: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்டார்

By KU BUREAU

சென்னை: பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் ‘டிஎன்அலர்ட்’ செயலியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டார்.

தலைமைச் செயலகத்தில் கடந்தசெப்.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான ‘டிஎன் அலர்ட்’ செயலி குறித்து முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, இந்த செயலியை எழிலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டார்.

புகார் பதிவு செய்யும் வசதி: இந்த செயலியில், நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்கு உட்பட்டதா? என்பதுபோன்ற தகவல்களை அறியும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை அறிந்துகொண்டு அதற்கேற்ப பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கையை மேற்கொள்ள உதவும் இந்த ‘டிஎன்அலர்ட்’ செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE