சென்னை: தமிழகத்தில் பதிவுத் துறை வருவாய் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு ரூ.1,121 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரித் துறை கூட்ட அரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், செப்டம்பர் மாதத்துக்கான பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த மாதங்களில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்களை துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் விவரித்தனர். அதில், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவுஅலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், வருவாய்மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட கருத்துருக் களை அமைச்சர் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்திபேசும்போது, ‘‘பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அலுவலர்களால்விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துகளை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் எடுத்துக் கூறி அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவுத்துறையில் கடந்த 2023-24-ம் நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது’’ என்றார்.
» ஓவியம், சிற்பக் கலையில் சாதனை: 6 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருது
» நாகர்கோவில் பெண் போலீஸார் அதிகார மோதல்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்