அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களிடம் பரப்ப திமுக சுற்றுச்சூழல் அணியினருக்கு அறிவுறுத்தல்

By கி.கணேஷ்

சென்னை: திமுக சுற்றுச்சூழல் அணியினருடன், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச்செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் முதல் அரசியல் கட்சியாக ஆளும் திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது. இக்குழுவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள நிர்வாக அமைப்பை சீரமைத்தல் ஆகியவவை தொடர்பான பரிந்துரைகளை தலைமைக்கு வழங்குவது, நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரிதது தலைமைக்கு பரிந்துரைப்பது, நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே இக்குழுவினர், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து, கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி, அந்த அணிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். குறிப்பாக தேர்தல் பணிகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து இந்த குழுவினருடன் பேசி, நிகழ்வுகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அறிவாலயத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக சுற்றுச்சூழல் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கற்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7.10 வரை நீடித்தது. இ்ந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 7.20 மணியளவிில் அறிவாலயம் வந்து, ஒருங்கிணைப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் கூட்டம் தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: “சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஒவ்வொரு அணிகளின் பணிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகளின் பணிகளை அறிவாலயத்தில் ஆய்வு செய்தோம். சுற்றுச்சூழல் அணியின் சார்பில் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தோம். மேலும், சுற்றுச்சூழலை காப்பதற்காக திராவிட மாடல் அரசு முனனெடுக்கும் திட்டங்களை அறிவுத்தளத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பது பற்றி அணியின் நிர்வாகிகள் விரிவாக எடுத்துக் கூறினர். வரும் 2026 தேர்தலுக்கான பணியைச் சுற்றுச்சூழல் அணியினர் சுற்றிச்சுழன்று மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினோம்” இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE