தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள் பொறுப்பேற்பு: அமைச்சர் தகவல்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று மாலை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் சார்பில் மூன்று நாள் நடைபெறும், 3-வது சர்வதேச மாநாடு தொடங்கியது. மாநாட்டினை தொடங்கி வைத்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியது: "இந்தியா அளவில் எந்த மாநில அரசும் மேற்கொள்ளாத, உலக அளவிலான வெற்றியோடு சென்னையில் முதல் சர்வசேத மருத்துவ மாநாடு நடத்தப்பட்டது. பெருகி வரும் நோய்கள், உலகை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நோய் என இவற்றுக்கு எல்லாம் எதிர்காலத்தில் நாம் எப்படி பட்ட தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆலோசனை செய்தவற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுப்பது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

தற்போது எதிர்கால மருத்துவம் குறித்து இந்திய அளவில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்படுவது என்பது தமிழத்தில் மட்டும் தான். கரோனா என்ற பேரிடரில் இருந்து மக்களை மீட்டு எடுத்த துறைகளில் பொது சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளது. நமது பொது சுகாதாரத் துறையை சேர்ந்த செவிலியர்கள் தான் தடுப்பூசி போடும் போது, தோளில் தடுப்பூசி உபகரணங்களை சுமந்துக்கொண்டு கிராம வீதிகளிலும், மலைகளிலும் ஏறி ஒருவர் விடாமல் தடுப்பூசி போடவில்லையா என கூவி, தடுப்பூசி போட வைத்து பேரிடரில் இருந்து மக்களை காத்த பெருமை செவிலியர்களை சாரும்.

மத்திய அரசின் சிறப்பு மிக்க திட்டம் தமிழகத்தில் இருந்து துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை மாடலாக வைத்து தான் இந்தியா முழுவதும் எடுத்து சென்றனர். ஆக, தமிழகம் என்பது பேரிடரில் இருந்து மக்களை காப்பதில் முன்மாதிரி மாநிலமாக இருந்தது. பொது சுகாதாரத் துறையில், 36 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட திட்டங்கள் கடந்த மூன்றுகளில் கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் 2021ம் ஆண்டிலும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் 2021ம் ஆண்டிலும், இதயம் காப்போம் என்ற திட்டம் 2023ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது. சிறுநீரக பாதுகாப்போம், மக்களை தேடி ஆய்வகம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், நடப்போம்- நலம் பெறும் என பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு உலகமே தமிழக சுகாதாரத் துறை உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் பாம்பு மற்றும் நாய்கடிக்கான மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாமல் இருந்தது. வட்டார, மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தான் இருந்தது. தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு மற்றும் நாய்கடிக்கான தடுப்பூசிகள் உள்ளது. இளம் வயதினருக்கான இதய பாதிப்பு தொடர்ந்துக் கொண்டு இருக்கும் சூழலில், அவர்களுக்கான மருத்துவம் 14 மாத்திரகளை மூலம் தமிழகத்தில் 11 ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.

மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.93 கோடி பேரும், இன்னுயிர் காப்பம் திட்டத்தில் 2.50 லட்சம் உயிர்கள் விபத்தில் சிக்கியவர்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர் என உலக வங்கி தலைவர்கள் மாநாட்டில் எடுத்துரைத்த போது, தமிழத்தில் செயல்படுத்துகின்ற திட்டங்களை உலக நாடுகள் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என கூறினார்கள். எந்த நோய் பாதிப்பு வந்தாலும் அதை தடுக்கின்ற ஆற்றல் தமிழக சுகாதார துறைக்கு உள்ளது என்பதை மக்களுக்கு உணர்ந்தும் வகையிலும், மக்கள் அச்சமின்றி வாழவும் சுகாதார துறை தாங்கி பிடிக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு விதைப்பதற்கான இது போன்ற மாநாடுகளும், ஆய்வு கட்டுரைகளும் பெரியளவில் உறுதுணையாக இருக்கும்.

பொன்னமராவதி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 சுகபிரசவம் நடந்துள்ளது. சுகாதாரதுறைக்கு இதைவிட நல்ல சான்று கிடைத்து இருக்க முடியாது. தாய்மார்களை யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழுமையாக சுகபிரசவம் என்ற நல்ல நிலையை நோக்கி தமிழகம் சென்றுக்கொண்டு இருக்கிறது என்றார்.

மாநாட்டுக்கு பின் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியது: "தமிழகத்தில் மகப்பேறு இறப்பு என்பது கடந்த ஆண்டை விட இந்திய அளவில் 9 சதவீதம் குறைந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. இதே நிலை மற்ற மாவட்டங்களிலும் தொடர வேண்டும். மயிலாடுதுறையில் ஒரே ஊசியை பயன்படுத்தியாக வீடியோ மூலம் கண்டறியப்பட்டதால், அங்கிருந்த பணியாளரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது அனைவருக்குமான படமாக அமையும். தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கிடங்கு உள்ளது.

6 மாவட்டங்களில் கிடங்கு இல்லாமல் இருந்தது. அதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ கிடங்குகளிலும் அடிப்படை தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை நூறு சதவீதம் உறுதி செய்யப் பட்டுள்ளது. மத்திய அரசு மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 545 விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றுள்ளோம். தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர் 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்கள் 2,253 பேர் மற்றும் மருத்துவர்கள் 2,550 பேருக்கான பணி நியமனம் தொடர்பான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் தொடர்பாக 38 வழக்குகள் உள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள் பணிகளிடங்கள் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்குகள் போடும் நபர்கள் அரசிடம் வருங்கள் பேசி சுமூக தீர்வு காண்போம். மருந்தாளூநர்கள் கடந்த மாதம் 946 பேர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக பணி நியமனம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியிடம் இருப்பதாக கடந்த மூன்று மாதங்களாக இருந்து வந்தது. அந்த பணியிடங்கள் இன்று நிரப்பப்பட்டுள்ளது. 14 பேரும் இன்றைக்கு பொறுப்பேற்றுள்ளனர்" என்று அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், கூடுதல் இயக்குநர் சம்பத், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறையில் செயல்படும் 36 திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அடங்கிய ஊர்வலமும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறும் திருமணம் மண்டபம் வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE