மதுரையில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட் - இடம் தேர்வுப் பணிகள் தீவிரம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை கரிமேட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேசுவரம், தூத்துக்குடி மற்றும் கேரளா உள்பட பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் இருந்து தினமும் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. கரோனா காலத்தில் இந்த மீன் மார்க்கெட் பொதுமக்கள் வசதிக்காக, தற்காலிகமாக மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் பின் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றப்பட்டது.

கரோனா முடிவுக்கு பிறகு, இந்த மீன் மார்க்கெட்டை, பேருந்து நிலையம் அருகே இருந்து மாற்று இடத்திற்கு மாற்றுவதற்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீன் வியாபாரிகள், மாட்டுத் தாவணி பகுதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்களை கொண்டு வருவதற்கு வசதியாக இருப்பதாகவும், இந்த இடத்தை மாற்றக்கூடாது என்றும் ஆளும்கட்சி பிரமுகர்களை சந்தித்து மாநகராட்சியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

இந்நிலையில், கரிமேட்டில் பழைய மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் அறிவியல் மையம் அமைவதால் மத்திய, மாநில மீன் வளத்துறை சார்பில் வழங்கப்படும் நிதி மூலம், மதுரையில் மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியில் பிரம்மாண்டமான புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட உள்ளது. இந்த புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி தீவிரமாக தேடி வருகிறது. விரைவில் இடம் தேர்வானதும், கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டுவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தற்காலிகமாக நாங்கள் ஓர் இடத்தை பார்த்து இறுதி செய்து வைத்துள்ளோம். மீன் மார்க்கெட் கட்டுவதற்கான நிதி வந்துவிட்டதால் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விடும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE