விளம்பரப் பலகைகள் வைக்க இனி அனுமதி பெறுவது கட்டாயம்: மதுரை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு! 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகரில் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் ஃபிளெக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவற்றை வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநாராட்சிக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, விளம்பரப் பலகைகள் மாநகர பகுதிகளில் வைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையையும் அமல்படுத்தியது. அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இருந்த போதும் மதுரை மாநகரப் பகுதியில் முக்கிய சாலைகளின் சென்டர் மீடியன், சந்திப்புப் பகுதிகள் மற்றும் உயரமான கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கிய நிறுவனங்கள், தனியார், அரசியல் கட்சியினர் மாநகராட்சி அனுமதியில்லாமல் ஃபிளெக்ஸ் பேனர்களையும் டிஜிட்டல் பேனர்களையும் வைத்துள்ளனர்.

இதன் பின்னணியில் அரசியல் கட்சிகளும் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. அதனால், மாநகராட்சிக்கு விளம்பரப் பலகைகள் மூலம் வரவேண்டிய பல கோடி ரூபாய் வருவாயில் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அப்புறப்படுத்துமாறும், அனுமதியின்றி வைத்தவர்களை விண்ணபித்து முறைப்படி அனுமதியுடன் விளம்பரப் பலகைகளை வைக்க அறிவுறுத்தும்படியும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தற்போது மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். இன்று கோரிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி மாலதி கூறுகையில், ''மாநகராட்சிப் பகுதியில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு முறைப்படி ஆணையாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தி வருகிறோம். விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட தனியார், விளம்பர நிறுவனங்கள் மாநகராட்சியில் அதற்கான கட்டணம் செலுத்தி அனுமதி பெற வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த காலத்தில் ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற ஆணையாளர் பெயரில் 2 ஆயிரம் ரூபாய்க்கான டிடி எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆணையாளர் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வதற்கு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளருக்கு அனுப்பி வைப்பார். மண்டல நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், அந்த இடம், சாலையை ஆய்வு செய்து, அதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து, ஆணையாளருக்கு மீண்டும் அனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு ஆணையாளர் அனுமதி வழங்கி, மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தியதும் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த அனுமதி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கோ வழங்கப்படும். சுவர் மீது விளம்பர பலகை வைத்தால் சதுர மீட்டர் ரூ.4,500, சிறிய பாலம், சாலைகளின் சென்டர் மீடியனில் வைக்கப்படும் சிறிய அளவிலான விளம்பரப் பலகைகளுக்கு சதுர மீட்டருக்கு ரூ.1,500 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது விளம்பரப் பலகைகளை அகற்றுவதால் ஏராளமான தனியார் நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதுவரை 2 நிறுவனங்களுக்கு மட்டுமே விளம்பரப் பலகை வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதில் ஒரு நிறுவனம், ஓராண்டுக்கு விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு அனுமதி பெறுவதற்கு ரூ.9 லட்சம் வரை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநகராட்சி முழுவதும் திட்டமிட்டப்படி இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE