“அரசுக்கு களங்கம் கற்பிக்க ஆதாரமற்ற பொய்களைச் சொல்கிறார் நாராயணசாமி” - அமைச்சர் நமச்சிவாயம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அரசுக்கு களங்கம் கற்பிக்க ஆதாரமற்ற பொய்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி வருகிறார். அவர் சரியாக ஆட்சி நடத்தியிருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியது தானே என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்லிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, புதுவை மாநில கர்லிங் ஃபெடரேஷன் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான கர்லிங் விளையாட்டு போட்டியை முதல்முறையாக புதுவையில் 2 நாட்கள் நடத்துகின்றன. இதன் தொடக்க விழா புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் இன்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் போட்டிகளை தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினார்.

இப்போட்டியில் 22 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் அளவில் தனி நபர், குழு போட்டிகள் நடக்கிறது. போட்டியில் வெற்றிபெருவோருக்கு நாளை மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது.

தேசிய கர்லிங் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: "பட்ஜெட்டில் புதுவை விளையாட்டுத் துறைக்கு ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையுடன் இணைந்திருந்த விளையாட்டுத் துறையை தனி துறையாக பிரித்து, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் என்ற துறையை உருவாக்கியுள்ளோம். நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள மைதானங்கள், விளையாட்டு திடல்களை சீரமைத்து வருகிறோம்.

நீண்டகாலமாக தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. விளையாட்டு ஃபெடரேஷன்களுக்கும் தொகை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆதாரமற்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.

தற்போதைய எம்பி வைத்தியலிங்கம் முதல்வராக இருந்தபோது, விடுதலைப் புலிகள் நடமாட்டம் புதுவையில் இருப்பதாக கூறிவிட்டு, டெல்லிக்குச் சென்றுவிடுவார். அதுபோலவே தற்போதும் பொய்களை கூறி வருகிறார் நாராயணசாமி. அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து பொய்களைக் கூறி வரும் நாராயணசாமி, சரியாக ஆட்சி நடத்தியிருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியது தானே? மீண்டும் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்க வேண்டியது தானே? நாராயணசாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் அவர் மீது உரிய நேரத்தில் வழக்கும் தொடருவோம். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உறவு சுமுகமாக உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். வாரிய தலைவர் பதவி குறித்து கட்சித் தலைமையும், முதலமைச்சரும் பேசி முடிவெடுப்பார்கள்" என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE