சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சொத்து வரி உயர்வை திமுக அரசு திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 8-ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்டாலினின் திமுக அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில் 3 முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைஉயர்ந்துள்ளது. நியாய விலைக்கடைகளில் குறித்த நேரத்தில்பொருட்கள் வழங்கப்படுவதில்லை. கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்கள், சிறுமியருக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. இதனால் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழக மக்களின் வாழ்க்கையை அரசு ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது. சொத்து வரி உயர்வால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

மக்கள் 40 மாதங்களாக பல்வேறு இன்னல்களை சந்திக்க காரணமான திமுக அரசைக் கண்டித்தும் மக்கள் நலன் கருதி,உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் அக்.8-ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மனிதச்சங்கிலிப் போராட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE