இந்தியா முழுவதும் மது ஒழிக்க வேண்டும்: ஆளுநருக்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி கருத்து

By KU BUREAU

சென்னை: காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்கள் கிடந்தது தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயம் பெருகிவிடும். இந்தியா முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை மாநகரில் இரவுநேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரங்களிலும் தொழிலாளர்கள் சுத்தம் செய்கின்றனர். சுத்தத்துக்கு தமிழக அரசுமுக்கியத்துவம் அளித்து வருகிறது. காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். சூதாட்டத்தையும்தான் காந்தி தடுத்தார். ஆனால், பலவித சூதாட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.

தமிழக அரசு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. ஆனால், மதுவை தமிழகம் மட்டும்ஒழிக்க இயலாது. அனைத்து மாநிலங்களும் சேர்ந்தால்தான் ஒழிக்க முடியும். இந்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். இந்தியா முழுவதற்கும் கொள்கை கொண்டு வந்தால்தான் ஒழிக்க முடியும்.

‘எண்ணித்துணிக’ என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகையில் கதாகாலட்சேபம் நடத்தி, அறிவியலுக்கு முரண்பாடான கருத்துக்களை ஆர்.என்.ரவி தெரிவித்து வருகிறார். அது தமிழகத்தில் எடுபடாது. இது திராவிட பூமி. எனவே, அவர் எதிர்பார்க்கும் எதுவும் தமிழகத்தில் நடைபெறாது. கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, கேரளாவில் மது இருப்பதால், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை. நாங்கள் மதுவிலக்கை கொண்டுவரத் தயார். மத்திய அரசும் இதற்குநடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். எதிர்காலத்தில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது, அனைத்து மாநில அரசுகளும் மதுவிலக்கை கொண்டுவர முதல்வர் முயற்சிப்பார்.

தமிழகத்தில் பட்டியலினத்தவர் என்பதால் யாரும் தாக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஆளுநர் ஆளுநருக்கான வேலையை பார்க்க வேண்டும். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE