மனிதவளத்தை பாதுகாக்க மதுவிலக்கு அவசியம்: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் ஆவேசம்

By KU BUREAU

கள்ளக்குறிச்சி: மனிதவளத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மதுவிலக்கை அமல்படுத்துவது அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று நடைபெற்றது.

கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். மகளிர் விடுதலை இயக்கச் செயலாளர் நற்சோனை வரவேற்றார். மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: மாநாட்டில் பெண்கள் கடல்எனத் திரண்டிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தின் அனைத்து சாலையும், உளுந்தூர்பேட்டையை நோக்கித் திரும்பி இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் நீல மயம், எங்கே வானம் பொத்துக்கொண்டு ஊற்றுமோ என அஞ்சி இருந்தோம். எப்போதும் இயற்கை நம் பக்கம் இருக்கும். இப்போதும் இயற்கை நம்முடன் ஒத்துழைத்து இருக்கிறது.

மது விலக்கு என்பது, நான் கண்டுபிடித்த புதிய கோரிக்கை அல்ல. கவுதம புத்தர் காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை இருந்துகொண்டுதான் இருக்கிறது.‘ஏன் இவருக்கு இந்த திடீர் ஞானம்?’ என்று சமூக ஊடகங்களில் சிலர் கேள்வி எழுப்பினர். இஸ்லாம் மார்க்கத்தில் மதுகிடையாது. மகான்கள் யாரும்மதுவை ஆதரித்துப் பேசியதில்லை.

திருவள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தின் மூலம்,மதுவின் தீமையை விளக்கியுள்ளார். வள்ளலார் சனாதனத்தை எதிர்த்தவர். வள்ளலார், நாராயண குரு ஆகிய மகான்களின் வம்சத்தில் இருந்து வந்தவன்நான். அதனால்தான் மதுவிலக்கு தேவை என்கிறேன். இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கத்துக்கான மாநாடுஅல்ல. காந்தியடிகளின் இருகொள்கைகளான ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘மது விலக்கு’ இரண்டிலும் நமக்கு உடன்பாடு உண்டு.

சுகாதாரமான வாழ்வாதாரத்தை மக்களுக்கு உறுதிசெய்ய வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அதனால்தான், இந்திய அளவில் மது விலக்கு வேண்டும் என்கிறோம். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ளவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.மனிதவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மது விலக்கு கோரப்படுகிறது. மதிப்பிட முடியாத மனிதவளத்தைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, "மதுவிலக்கை அமல்படுத்த மக்களிடம் எழுச்சி வேண்டும் என்று1971-ம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அதை திருமாவளவன் முன்னெடுத்துள்ளார். மது ஒழிப்புக்காக மாநாடு நடத்த துணிச்சல் வேண்டும்” என்றார்.

மாநாட்டில், திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி. சுதா,இந்திய கம்யூனிஸ்ட் மகளிர் தேசியக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, அய்யா வைகுண்டர் இயக்கத் தலைவர் பாலபிரஜாபதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ பேசினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிதுணை பொதுச் செயலாளர்கள்வன்னிஅரசு, ஆதவ் அர்ஜூனா, வீரக்குமார், எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு. கடலூர் மாநகராட்சிதுணை மேயர் பா.தாமரைச்செல்வன் பங்கேற்றனர். விசிக மகளிர்விடுதலை இயக்க மாநிலப் பொருளாளர் மல்லிகையரசி நன்றி கூறினார்.

தேசியக் கொள்கையாக... மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுத்து, சட்டம் இயற்ற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்குவதுடன், கூடுதல் நிதிப்பகிர்வு அளிக்கவேண்டும். மது விலக்கு தொடர்பாகதனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் எனவலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்தியஅரசுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் மனிதவளத்தை பாதுகாக்கும் வகையில், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். அதற்கு ஏதுவாக, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான காலஅட்டவணையை வெளியிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.

மேலும், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மது மற்றும்போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். மது மற்றும் போதைக்கு அடிமையானவர் களுக்காக, அனைத்து வட்டாரங்களிலும் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும். மதுவிலக்கு தொடர்பாக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும், மது விலக்குப் போராளி சசிபெருமாள் பிறந்த நாளின்போது, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

பெண் காவல் ஆய்வாளரை... மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் போலீஸாரின் அறிவுறுத்தல் பேரில்கடைகள் மூடப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். கட்சியினர் சிலர் நான்கு சக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றபோது, மாநாட்டு பந்தல் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளர் பிரபாவதி, அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார். அவரை கட்சித் தொண்டர்கள் தள்ளிவிட்டு, நிலைகுலையச் செய்தனர். இதனால் பெண் காவல் ஆய்வாளர்தடுமாறி விழுந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE