புதுச்சேரி ஆளுநராக தமிழிசை இருந்த 3 ஆண்டுகளில் ரூ.2.99 கோடி செலவு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்த 3 ஆண்டுகளில் அவருக்கு ரூ.2 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரத்து 561 செலவாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் தனது ஆளுநர் பதவியை கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த அசோக் ராஜா துணை நிலை ஆளுநராக இருந்த போது தமிழிசை செலவிட்ட தொகை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரி செந்தில்குமார் பதில் தந்துள்ளார் அதன் விவரம்: துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்தபோது அவரும், அவரது அரசு விருந்தினர்களுக்கு என்று பூங்கொத்து உணவு மளிகை எரிவாயு உட்பட 2021- 22ல் ரூ.90.86 லட்சமும், 2022- 23-ல் ரூபாய் 54.19 லட்சமும், 2023 - 24-ல் ரூ.91.59 லட்சமும் செலவாகி உள்ளது.

துணைநிலை ஆளுநர் மற்றும் அவரின் அணிவகுப்பு வாகனங்களுக்கு எரிபொருள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2021- 22-ல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவாக ரூபாய் 30.71 லட்சமும் 2022-23-ல் ரூபாய் 21.19 லட்சமும் 2023 -24 ரூபாய் 10.95 லட்சமும் செலவாகி உள்ளது.

முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு வந்த பரிசு பொருட்கள் குறித்து தகவல் இச்செயலகத்தில் இல்லை. அவரின் விமான செலவுக்கு இந்தச் செயலகம் ரூபாய் 21,324 செலவு செய்துள்ளது. அவரின் பிற விமான பயணங்களில் செலவுகளை தெலுங்கானா மாநில அரசு ஏற்றுள்ளது. மொத்தமாக கடந்த 2021- 22-ல் ரூபாய் ஒரு கோடியே 21 லட்சமும், 2022-23-ல் ரூபாய் 75 லட்சத்து 38 ஆயிரம், 2023- 24-ல் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE