புதுடெல்லி: சென்னையில் நாளை ’இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்’ என்ற தலைப்பில் தேசியப் பயிலரங்கம் நடைபெறுகிறது. இந்த ஏழு நாள் நிகழ்ச்சியை நாளை முதல் சென்னையின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) நடத்துகிறது.
மத்திய அரசு கடந்த அக்டோபர் 12, 2004இல் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்து அரசாணை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி தகுதிகொண்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டு செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில் தமிழின் இலக்கண, இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் முதலானவற்றில் பல்வேறு ஆய்வுத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இவை, தொடக்ககாலம் முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை. இந்தவகையில், தமிழின் தொன்மையான இலக்கண, இலக்கியங்களை இந்திய மொழிகளிலும், உலகின் பிறமொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுவருகிறது. பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்திவருகிறது.
மேலும், தமிழ்மொழியில் தொல்இலக்கண, இலக்கியங்களின் மேலான சிந்தனைகளை அனைவரும் உணர்ந்து பின்பற்றிட வழிகோலும் செயலை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. சிஐசிடியின் மொழிபெயர்ப்புத் திட்டத்தின்கீழ், இந்தியாவின் 25 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் 24 இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கும் பணி, சிஐசிடியால் நடைபெற்று வருகிறது. உலகின் எட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் இன்னும், 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
» பள்ளிகளை தொடர்ந்து மதுரையில் 4 பிரபல ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
» கோவையில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்
நாளைய நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசத்தில் முதன்மைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான முனைவர் பி.வி.ஜெகன்மோகன் முக்கிய உரை ஆற்றுகிறார். சிஐசிடியின் துணைத்தலைவரும் பேராசிரியருமான மருத்துவர். சுதா சேஷய்யன், வாழ்த்துரை வழங்குகிறார். சிஐசிடியின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் தலைமையிலான இவ்விழா நாளை அதன் அரங்கில் துவங்குகிறது. இந்த விழாவில் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதுமுள்ள பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் திருக்குறளை விரும்பிப் படிக்கின்றனர். இதற்காக, திருக்குறள் தற்போது பல பிறமொழிகளிலும் வெளியாகி விட்டது. பிறமொழிகளில் படித்தவர்களாலும் திருக்குறள் கருத்துக்கள் போற்றி புகழப்படுகிறது. திருக்குறளைக் கல்வியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் விரும்பி வாசிப்பதைக் காணமுடிகிறது.
இதனால், திருக்குறளில் ஆர்வமிக்க பிறமொழியாளர்களை அழைத்து அவர்களின் பார்வையில் திருக்குறள்தாக்கத்தை அறிவது அவசியமாகிறது. இந்த நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இத்தேசியப் பயிலரங்கை நடத்துகிறது. இப்பயிலரங்கிற்காக வரவழைக்கப்பட்ட கட்டுரைகள் நிறைவு விழாவில் நூலாகவும் வெளியிடப்படுகிறது. அவை, இந்தியிலும், ஆங்கிலத்திலும் என இருமொழிகளில் இடம் பெற உள்ளது.
சிஐசிடியின் இந்தப் பயிலரங்கத்தின் 28 அறிஞர்களில் அவதி, பகேலீ, பஜ்ஜிகா, பெங்காளி, போஜ்புரி, பிரஜ், சத்தீஸ் கடீ, கட்வாலீ, குஜராத்தி, ஹரியாணவீ, இந்தி ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்கள். கச்சி, காஷிகா, கஷ்மீரி, மகதி, மைதிலி, மேவாரி, நேபாளி, உடியா, ராஜஸ்தானி, சம்ஸ்கிருதம், சந்தாலீ, சிந்தி, உர்தூ ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்களும் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.