மாதச் சம்பளத்தை கால தாமதமின்றி வழங்கக் கோரி காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம்

By என்.சன்னாசி

மதுரை: காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாதந்தோறும் தாமதமின்றி சம்பளம் வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு தொடர்ந்து நெருக்கடி உள்ளது. பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியமும் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பல்கலையில் ஆண்டுக்கு ரூ.58 கோடி மானியமாக தமிழக அரசு நிதி வழங்கிய நிலையில், தற்போது ரூ.8.50 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பல்கலையில் ஏற்கெனவே இருக்கும் ஆடிட் ஆட்சேபனைகளாலே அரசு நிதியை குறைத்ததாக அரசு காரணம் சொல்கிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் வழங்க போதிய நிதியின்றி, பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜூலைக்கு மட்டும் சம்பளம், ஓய்வூதியம் செப்.27ல் கிடைத்தது.

ஆகஸ்டு, செப்டம்பருக்கான சம்பளம், ஓய்வூதியம் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியத்தை மாதந்தோறும் தவறாமல் வழங்க வேண்டும், மாணவ, மாணவியர், ஆராய்ச்சியாளர்கள் கற்றல், கற்பித்தலுக்கான அத்தியாவசிய உள்கட்ட அமைப்பு வசதிகளை முறையாக பராமரித்தல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான கணக்கு இருப்பு விவரத்தை எழுத்துப் பூர்வமாக தெரிவித்தல், ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு ஆணையை உரிய நேரத்தில் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.5 முதல் பேராசிரியர்கள் அலுவலக நேரத்தை தவிர்த்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

இதன் தொடர்ச் சியாக தாமதமின்றி மாதச் சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்துக்குள் பிரதான வாயில் முன்பு மாலை வரையிலும் வேளாங்கனி, இளம்வழுதி உள்ளிட்ட பேராசிரியர்கள் நேற்று உண்ணாவிரத அறப்போராட்டம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE