தாமத வரிக்கு ஒவ்வொரு மாதமும் 1% அபராதம் - மாநகராட்சிகளில் புதிய நடைமுறை அமல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: மாநகராட்சிகளில் வசிப்போர் இனி வரிசெலுத்துவதில் தாமதித்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவீதம் அபராத தொகையுடன் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை நேற்றில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 56,430 வீடுகள் உள்ளன. 10,400 வணிக நிறுவனங்கள் உள்ளன. வீட்டுவரி, குடிநீர் வரி, பாதாளசாக்கடை வரி, நிறுவனங்களுக்கான வரி என திண்டுக்கல் மாநகராட்சியில் அரையாண்டுக்கு ஒருமுறை வரிவசூல் செய்யப்படுகிறது. மாநகராட்சிக்கு முறையாக சிலர் வரி செலுத்தாமல் இருப்பதால், வரி நிலுவை பல கோடி ரூபாய் வரை உள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கும் நிலைக்கும் அவ்வப்போது தள்ளப்படுகிறது.

நிதியாண்டு முடிவுக்கு முன்னதாக மாநகராட்சி பணியாளர்கள் வரிவசூல் செய்ய வீடுவீடாகச் சென்று நோட்டீஸ் வழங்குவது, அதிக வரி நிலுவை வைத்துள்ள வீடுகளின் குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது, வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பது எனப் பல்வேறு நட வடிக்கைகளில் ஈடுபட்டு வரியை வசூலித்து வந்தாலும் வரி நிலுவை அதிக அளவில்தான் உள்ளது.

இந்நிலையில், முதலாம் அரையாண்டு வரியை முதல் மாதமான ஏப்ரல் மாதத்துக்குள் செலுத்திவிட்டால் வரித்தொகையில் 5 சதவீத தள்ளுபடி செய்யும் திட்டத்தையும் அரசு அறிவித்தது. இதேபோல் இரண்டாம் அரையாண்டில் அக்டோபர் மாதத்துக்குள் வரிசெலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரியில் கழித்துக் கொள்ளும் திட்டமும் அமலில் உள்ளது. தற்போது வரிவசூலை அதிகரிக்கவும், மக்கள் தாங்களாகவே முன்வந்து வரியை செலுத்தவும் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி முதல் அரையாண்டுக்கான வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கட்டத்தவறினால், செலுத்தவேண்டிய வரியில் ஒரு சதவீதம் அபராதமாக சேர்த்து செலுத்தவேண்டும். இது அக்டோபர் இறுதிவரைதான். அக்டோபர் மாதத்துக்குள்ளும் முதல் அரையாண்டுக்கான வரியை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் நவம்பரில் விதிக்கப்படும். இவ்வாறு ஒவ் வொரு மாதமும் அபராதம் ஒரு சதவீதம் அதிகரிக்கும் வகையில் வரி செலுத்தும் கணினி மென்பொருளில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை நேற்று அமலுக்கு வந்துள்ளது. அபராத வட்டி குறித்து சில நாட்களுக்கு முன்னரே அறிவித்திருக்கலாம். இந்த வட்டி உயர்வு குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கே தெரியவில்லை. கணினியில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டதால், மக்களுக்கு பதில் தர முடியாமல் பணியாளர்கள் திணறுகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி மட்டு மின்றி தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த அபராத முறை நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 6 சதவீத வரி உயர்வும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE