அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வலியுறுத்தி பாபநாசத்தில் 25-வது ஆண்டாக ஆளில்லா கடை திறப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: வாழ்க்கையில் அனைவரும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாபநாசத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாளில் ஆளில்லா கடை இன்று திறக்கப்பட்டது. இந்தக் கடை இன்று ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும்.

பாபநாசம் பேருந்து நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை இன்று திறக்கப்பட்டது. இந்தக் கடையை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.எஸ்.ரமேஷ்பாபு மற்றும் பாபநாசம் டிஎஸ்பி-யான கோ.குமரவேலு ஆகியோர் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

இந்த ஆளில்லா கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், தின்பண்டங்கள் உள்ளன. அவற்றின் மீது விலை அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களின் அருகே டப்பா ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை இந்த டப்பாவில் போட்டு விட்டுச் செல்கின்றனர். சிலர், பொருளுக்கான தொகை போக மீதி சில்லறையையும் டப்பாவில் இருந்து எடுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சக்திவேல் கூறியதாவது: மகாத்மா காந்தி நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவை நனவாக்கிட, எங்களது அமைப்பு சார்பில் காந்தி பிறந்த நாளில், நேர்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 25 ஆண்டுகளாக பாபநாசத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்படுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த ஆளில்லா கடையானது வருடத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது.

இந்தக் கடையி்ல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்ளன. அந்தந்த பொருட்களில் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தை டப்பாவில் வைக்க வேண்டும். இந்த கடையில் ரூ.7,500 மதிப்பிலான பொருட்கள் உள்ளன. லாபம் நோக்கமெல்லாம் கிடையாது. நேர்மை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விற்பனையாகும் தொகையைச் சேவை திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE