சென்னை: விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக, சென்னை மெரினாவில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டன. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களின் சேவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை தினம் அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதை கண்டுகளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தாம்பரம் விமானப் படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் 8-ம் தேதி நடைபெற உள்ளன.
இந்நிலையில், மெரினாவில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மதியம் 1.10 மணி முதல் 1.45 மணி வரை நடைபெற்றது. இதில், ‘ரஃபேல்’, ‘தேஜஸ்’ விமானங்கள், ‘சாரங்’ ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன. மெரினா கடற்கரையில் இருந்த மக்கள், இந்த சாகச பயிற்சிகளை கண்டு ரசித்தனர்.
» காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
மெரினாவில் இன்று மற்றும் 4-ம் தேதியும் ஒத்திகை நடைபெறஉள்ளது. இதேபோல, தாம்பரத்திலும் தொடர்ந்து ஒத்திகை நடந்து வருகிறது. ஒத்திகையின்போது, வழக்கமான விமானங்களை இயக்குவது இடையூறாக இருக்கும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும் அந்த நேரத்தில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
விமான நிலையம் மூடல்: அந்த வகையில், சென்னை விமான நிலையம் நேற்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் 15 விமானங்கள், தரை இறங்கும் 10 விமானங்கள் என மொத்தம் 25 விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
இதேபோல, வரும் 8-ம் தேதி வரை விமான ஒத்திகை நேரத்தின்போது சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை சேவைகள் நிறுத்தப்பட்டு, விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்படும். இதனால், பயணிகள், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நேர மாற்றம் குறித்து உறுதி செய்துகொண்டு, பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
‘ட்ரோன்’ பறக்க தடை: இதற்கிடையே, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தொலைதூர பைலட் விமான அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் எந்தவிதமான பொருட்களையும் பறக்கவிட தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். நேற்று அமலுக்கு வந்துள்ள இந்த தடை உத்தரவு அக்டோபர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.