தமிழகத்தில் இனி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்க கூடாது: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: உயர் நீதிமன்றம் வகுத்துள்ள நிபந்தனைகள், உத்தரவின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். குறிப்பிட்ட மதத்தினர், எதிர்கொள்கை கொண்டவர்கள் வசிக்கும் பகுதி, பொது சாலை என்றெல்லாம் கூறி அனுமதி மறுக்க கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அக்டோபர் 6-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி அந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, ‘42 இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் 16 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது’ என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் புதிதாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்துவது குறித்தும் முடிவெடுத்து போலீஸார் அக்டோபர் 1-ம் தேதி (நேற்று) தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கேஎம்டி. முகிலன் கூறியதாவது: அனுமதி மறுத்திருந்த 16 இடங்களில், 10 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கிவிட்டோம். சென்னை அடுத்த மாங்காடு, கொரட்டூர், கோவை ரத்தினபுரி ஆகிய இடங்களில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தை தங்கள் பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி மறுத்துள்ளன. சென்னை மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில்பணி நடைபெறுகிறது. சேலையூரில் பேருந்து செல்லும் பிரதான சாலையில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரியுள்ளனர். அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே குலசேகரப்பட்டினம் தசரா பண்டிகை நடந்து வருகிறது. இந்த காரணங்களால் மேற்கண்ட 6 இடங்களில் மட்டும் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட மதத்தினர், எதிர்கொள்கை கொண்டவர்கள் வசிக்கும் பகுதி, பொது சாலை என்றெல்லாம் கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்க கூடாது. மாங்காடு, கொரட்டூர், ரத்தினபுரியில் அனுமதி மறுத்துள்ள பள்ளி நிர்வாகத்திடம், பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கடிதம் வாங்கி கொடுத்தால், அங்கு ஊர்வலம், கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

சாயர்புரத்தில் அக்டோபர் 20-ம்தேதி ஊர்வலம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளதால், அதற்கும் அனுமதி வழங்க வேண்டும். சேலையூரில் கடந்த ஆண்டு ஊர்வலம்நடத்தப்படாத நிலையில், அருகேஉள்ள சிட்லபாக்கத்தில் அனுமதிகோரினால் அனுமதி வழங்க வேண்டும். மேடவாக்கத்தில் மாற்று வழியில் ஊர்வலம் செல்ல அனுமதிக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதமே இந்த நீதிமன்றம் நிபந்தனைகளை வகுத்து விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி இனிவரும் காலங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். தவிர, புதிதாக எந்த ஒரு நிபந்தனையும் விதிக்க கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE