கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச் சாலை மேம்பாலப் பணி உட்பட 11 புதிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும்தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர்கள் அஜய் தம்தா, எல்.முருகன், தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது, பதிய திட்டப் பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல்- சென்னை வெளிவட்டச் சாலை வரையிலான உயர்மட்டச் சாலை,செங்கல்பட்டு - உளுந்தூர்பேட்டை வரை 8 வழிச் சாலையாக தரம்உயர்த்துதல், திருவாரூர் புறவழிச்சாலை, கன்னியாகுமரி- களியக்காவிளை வரை 4 வழிச்சாலை, விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் 4 வழிச்சாலை பணியை விரைவுபடுத்துதல் ஆகிய திட்டப்பணிகள் குறித்து எ.வ.வேலு வலியுறுத்தினார்.
மேலும், திருவாரூர் ரயில்வே மேம்பாலம் மறுகட்டுமானம் செய்தல், திருவண்ணாமலை மற்றும்பல்லடம் புறவழிச் சாலை அமைத்தல், வள்ளியூர்- திருச்செந்தூர் சாலை, கொள்ளேகால் – ஹானூர் சாலை, மேட்டுப்பாளையம் –பவானி சாலை, பவானி – கரூர்சாலை ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல், திருச்சி (பால் பண்ணை) -துவாக்குடி சாலையை மேம்படுத்துதல், கோயம்புத்தூர் புறவழிச் சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல், தாம்பரம் – மதுரவாயல் – மாதவரம் புறவழிச் சாலையில் (சென்னை புறவழிச் சாலை) விடுபட்ட இணைப்புகள் வசதிகளை வழங்குதல் ஆகிய பணிகள் தொடர்பாகவும் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
» அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கிய ஈரான்: மத்திய கிழக்கில் பதற்றம்
பின்னர் அவர் பேசியதாவது: நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் உள்ள இடர்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இடர்பாடுகளை தீர்க்கவும், தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும் தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.