மதுரை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்வால் மக்கள் அதிர்ச்சி

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மாநகராட்சியில் 6 சதவீத சொத்துவரி உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சொத்துவரி உயர்வுக்கு அதிமுக, திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி என, பல்வேறு வகையில் ஆண்டுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சிக்கு பிரதான வருவாயாக உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 350 கோடி வருவாய் கிடைக்கிறது. இவற்றின் மூலம் மாநகராட்சி பகுதியிலுள்ள வார்டுகளுக்கான வளர்ச்சி, ரோடுகள் பராமரிப்பு, கால்வாய்கள் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக மாநகராட்சிகள் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகத் துறையின் உத்தரவும் உள்ளது.

இதன்படி, நடப்பாண்டிற்கு தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்திக்கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால் எப்போது முதல் உயர்த்தவேண்டும் என்ற முடிவை அந்தந்த மாநகராட்சியே முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக். 01 முதல் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பல வார்டுகளில் இரண்டாவது அரையாண்டுக்கான வரியை மக்கள் செலுத்தும்போதுதான் சொத்து வரி உயர்த்தியதும், அக்டோபருக்கு முன் நிலுவையிலுள்ள சொத்து வரிக்கு 1 சதவீதம் வட்டி வசூலிக்கும் தகவலும் தெரியும் என, மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் செப்., 27 ல் நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி உயர்வு குறித்து தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தால் மக்களுக்கு தெரிந்திருக்கும் என, கவுன்சிலர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “அக்.01 முதல் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பது அனைத்து மாநகராட்சிக்கும் பொதுவான உத்தரவுதான். இதை மதுரையிலும் பின்பற்றி உள்ளோம்” என்றார்.

சொத்துவரி உயர்வுக்கு அதிமுக, திமுக, கூட்டணியின் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக எதிர்கட்சி தலைவர் சோலைராஜா கூறுகையில், “திமுக., ஆட்சிக்கு வந்தவுடன் 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. குடிநீர், குப்பை வரிகளும் உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் சொத்துவரியை உயர்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது பொதுமக்களுக்கு இரட்டை சுமையை உருவாக்கும். செப்.,27 ல் நடந்த கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது. சொத்துவரி உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம்” என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன்: இச்சொத்து வரி உயர்வு என்பது திடீர் அறிவிப்பாக உள்ளது. கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் எதுவும் இதுபற்றி கொண்டு வரவில்லை. சொத்துவரி உயர்வு என்பது பொதுவான அரசாணை என்றாலும், மாமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கலாம். திடீரென கொண்டு வந்துள்ள சொத்துவரி உயர்வு மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும்.

மார்க்சிஸ்ட் கம்யூ. கவுன்சிலர் குமரவேல்: சொத்துவரி உயர்வு கண்டிக்கத்தக்கது. கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் உயர்த்தியது அதிர்ச்சி அளிக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஏற்கெனவே இருக்கும் ரூ.50 கோடிக்கு மேலான வரி பாக்கியை வசூலித்தாலே வரியை உயர்த்தவேண்டிய நிலை ஏற்படாது. ஏற்கனவே உயர்த்திய வரியை செலுத்த முடியாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். சொத்துவரி உயர்வை கைவிடவேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE