செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா விழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சின்னம்மன் கோயில், ஓசூர் அம்மன் அம்மன், அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் அம்மன் அலங்கரித்து வைக்கப்படும் இந்நிகழ்வு அம்மன் தவக்காலம் என்று கூறப்படுகிறது.
விஜயதசமி அன்று வன்னி மரம் வெட்டுதல் நிகழ்வுடன் தசரா நிறைவடையும். இதை முன்னிட்டு செங்கல்பட்டு நகரில் அண்ணா சாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சிகள் சிறுவர்களுக்கான விளையாட்டு ராட்டினங்கள் கடைகள் என ஏராளமானவை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த தசரா விழாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வார்கள். தசரா விழாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்கள் தொடங்குவதற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா தசரா நடைபெற உள்ள இடங்களில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராட்டினங்களின் கட்டமைப்பு குறித்த சான்றிதழ் தசரா விழா தொடங்குவதற்கு முன்பு பெற வேண்டும், ராட்டினங்கள் மற்றும் கடைகள் உள்ள இடங்களில் கட்டாயம் தீ தடுப்பு சாதனங்கள் வைக்கப்பட வேண்டும், ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மூன்று ராட்டினங்களை அகற்ற வேண்டும், மின்சாரத் திருட்டு நடைபெற்றால் உரியவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் துரித சிற்றுண்டி மற்றும் உணவகங்களில் தரமான உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை நாள்தோறும் ஆய்வு செய்ய வேண்டும், 10:30 மணி வரை மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ராட்டினங்கள் செயல்பட வேண்டும் என்றும் சார் ஆட்சியர் நாராயண சர்மா உத்தரவிட்டார். செங்கல்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் பூங்குழலி உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
» ‘புல்டோசர்’ வழக்கில் அதிரடி முதல் பாமக Vs திமுக வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
» மேட்டூர் அருகே சிறுத்தையை சுட்டுக் கொன்ற ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது