“முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்தான் தனிநபர் பலன்பெறும் திட்டங்கள்...” - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பெருமிதம்

By க. ரமேஷ்

கடலூர்: திமுக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் தனிநபர் பலன் பெறுகின்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று (அக்.1) நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை வகித்துப் பேசினார்.பேரூராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் பழனி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசும்போது தெரிவித்ததாவது: "அண்ணாமலை நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி சுற்றி நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை, மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். தற்போது திமுக ஆட்சிக்கு பெண்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

பெண்கள் மத்தியில் அந்தளவுக்கு எழுச்சியை உருவானதற்குக் காரணம் ரூ.1000 வழங்கும் மகளிர் உதவி திட்டம், கட்டணமில்லா பேருந்துப் பயணம் ஆகியவையே. அதிமுக பல்வேறு முறை ஆட்சி பொறுப்பேற்றாலும், திமுக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் தனிநபர் பலன் பெறுகின்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தாய்க்கும், சேய்க்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து சாதனை படைத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் சமுதாய நலக்கூட்டத்தையும், சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையத்தையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தவப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும், புதுமைப் பெண் திட்டத்தில் மாணவியருக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆக, ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் ஆகிய மூவருக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத இந்தத் திட்டம் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார். கூடுதல் ஆட்சியர் சரண்யா, வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ராஜேந்திரன், சோழன், மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி.மணிகண்டன், நகர திமுக துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வி.மலர்விழி, மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஆர் காயத்ரி, உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE