ராமநாதபுரம்: ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் சார்பில் உலக முதியோர் தின விழா இன்று (அக்.1) ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதில், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பேராசிரியர் சேசுராஜ் தலைமை வகித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
ராமநாதபுரம் கனகமணி மருத்துவமனை மருத்துவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதியோர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007ஐ பற்றி விளக்கினார். ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பேசினர். இதில் ஏராளமான மூத்தகுடிமக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும், மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் முதியோர்கள் பயன்பெறும் வகையில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை ரூ. 7 லட்சமாக உயர்த்த வேண்டும், முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்கள், மன நல மையங்கள், நோய் தடுப்பு சிகிச்சை மையங்கள், மாற்றுத்திறனாளி முதியோர் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும், ராமநாதபுரம் அருகே உச்சிப் புளியில் சர்வதேச விமான நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
» இலங்கை சிறையிலிருந்து மீனவர்களை விடுவிக்க கோரிக்கை: ராமேசுவரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்!
» புற்றுநோய் மையமாக மாறும் கோவை, திருப்பூர்: அதிர்ச்சிப் பின்புலம்