மதுரையில் பொதுப்பணித் துறை பெண் ஊழியர் மீது தாக்குதல் - சகோதரர் மீது வழக்கு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் விவாகரத்தான கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி பொதுப்பணித் துறை பெண் ஊழியரை தாக்கிய அவரது சகோதரர் மீது வழக்குப் பதியப்பட்டது.

மதுரை அழகர் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா (45). இவர், பொதுப்பணித் துறையில் பணிபுரிகிறார். இவரது மகள் மருத்துவமும், மகன் பொறியியலும் படிக்கின்றனர். இருந்த போதும் பிரேமலாதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியே வாழ்கின்றனர். இந்நிலையில் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என பிரேமலதாவின் குடும்பத்தினரும், அவரது சகோதரர் ராம்குமாரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 29ம் தேதி பிரேமலதாவை அவரது கணவர் வீட்டுக்குச் செல்லுமாறு ராம்குமார் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அப்போது தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரேமலதாவை ராம்குமார் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. காயமடைந்த பிரேமலதா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ராம்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் கே.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE