கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு உள்ள ஐஓபி வங்கியில் இரவு திடீர் என்று அபாயமணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் காந்தி பார்க் எதிர்ப்புறம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரதான கிளை உள்ளது. 30ம் தேதி மாலை வங்கி ஊழியர்கள் வங்கியை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் இரவு 10:20 மணியளவில் வங்கியிலிருந்து அபாய மணி திடீரென ஒலிக்கத் தொடங்கியது. இதனால், வங்கியின் செக்யூரிட்டி பிரகாஷ் (50) அதிர்ச்சியடைந்தார். அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் கூட்டம் கூடினர். வங்கிக்குள் கொள்ளையர்கள் புகுந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்த இரவு நேர காவலர், வங்கி முதுநிலை மேலாளருக்கு கைபேசி மூலம் தகவல் அளித்தார்.
அவர் அருகிலேயே தங்கியிருந்ததால் வங்கியை திறந்து பார்த்தார். அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை. அபாய மணி அருகே செல்லும் ஒயரில் எலி உரசியதால் அபாயமணி அடித்திருக்கும் என்றார். பின்னர் ஒயரை தனியாக பிரிந்து வைத்து வங்கியை பூட்டி சென்றார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் காந்தி பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.