குன்னூரில் மண்ணில் புதைந்து ஆசிரியை பலி - நீலகிரி கனமழை பாதிப்பு நிலவரம்

By KU BUREAU

உதகை: குன்னூரில் மழையால் மண் சரிந்து வீட்டில் இருந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

நேற்று முன்தினம் இரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள அலாய் சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கன மழையால் திடீரென்று அங்குள்ள நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர், மண் சரிவில் சிக்கிக் கொண்டார்.

வீட்டின் கதவு மீது மண் விழுந்ததால், அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மூவரையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், மண்ணில் புதைந்த ஜெயலட்சுமியை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர், வருவாய் துறையினர், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலை ரயில் ரத்து: மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே நேற்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரன்னிமேடு - ஆடர்லி - ஹில்குரோவ் பகுதிகளில் மண்ணுடன் கற்கள் விழுந்துள்ளதால், தற்காலிகமாக நேற்று ஒரு நாள் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உதகை - குன்னூர் இடையே மற்ற ரயில்கள் இயக்கப்பட்டன.

இதுதுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன மழை காரணமாக மலை ரயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பாறைகள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணி மேற்கொள்வதில் கடும் சிரமம் உள்ளது. எனவே, அக்டோர் 1-ம் தேதியும் மேட்டுப்பாளையம் - குன்னூரிடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்குள் வெள்ளம்: குன்னூர் நகராட்சி 11 மற்றும் 20-வது வார்டுகளுக்குட்பட்ட எல்.ஜி.குவாட்டர்ஸ், மாடல் ஹவுஸ் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளில், சமீப காலமாக ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு நீர் வழித்தடங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இதனால் தண்ணீர் செல்ல முடியாமல், மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் அந்த பகுதியில் நிதி ஒதுக்கப்பட்டு, நடைபாதை புதிதாக சீரமைக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் செல்ல முறையாக கால்வாய் அமைக்கப்படாததால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல், அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

மழை அளவு (மி.மீ.) - நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை வரை கோத்தகிரி 72, குன்னூர் 62, கோடநாடு 48, குந்தா 39, கீழ் கோத்தகிரி 36, பர்லியாறு 35, உதகை 32.2, கிண்ணக்கொரை 24, கெத்தை 23, எமரால்டு 9, அப்பர் பவானி 7, அவலாஞ்சி 4, கிளன்மார்கன் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE