விழுப்புரம்: தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றியமைக்கப்பட்டு, உதயநிதி துணை முதல்வராக ஆகியிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தேர்வான செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
2021-ல் திமுக ஆட்சி அமைந்த தொடக்கத்திலேயே, செஞ்சி தொகுதி எம்எல்ஏவான மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1976-ம் ஆண்டு திமுகவில் இணைந்த இவர், படிப்படியாக வளர்ந்து 1986-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை செஞ்சி பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு அமைச்சராக உயர்த்தப்பட்டார். இந்தச் சூழலில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி என்ன என்று விழுப்புரம் மாவட்ட திமுகவினர் மற்றும் பிற அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
திமுக நிர்வாகிகளை விட, மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மஸ்தான் வாய்ப்பு வழங்கியதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றன.
மஸ்தானின் ஆதரவாளரான திண்டிவனம் நகர்மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் மீது திமுக நகர்மன்ற உறுப்பினர்களே கடும் குற்றச்சாட்டு தெரிவிக்க மஸ்தானுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திண்டிவனம் நகர திமுகவினரே முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, மஸ்தான் குறித்து புகார் அளித்தனர்.
இதற்கிடையே மஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில்,மஸ்தான் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக இருப்பதாக, மரக்காணம் கள்ளச்சாராய மரண சம்பவத்தில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சர்ச்சைக்கு இடையே திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த மஸ்தான், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சிப் பதவி வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரது சகோதரர் காஜா நசீர் செஞ்சி நகர திமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பதவியில் இருந்தும், அவரது மருமகன் ரிஸ்வான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம்மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மஸ்தானும் நீக்கப்பட்டு, பழையபடி மாவட்ட அவைத் தலைவராக ஆக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆதரவாளர்களிடையே, ‘யார் பெரியவர்?’ என்பதில் போட்டி ஏற்பட்டது.
பேனர்கள் வைப்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவியது. இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து பொன்முடி மைக்கை பிடுங்கிய போது, இருவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
மஸ்தான் குடும்பத்தினரின் ஆதிக்கம், அவருடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் தேவையானதைச் செய்வது ஆகிய புகார்களால் திமுக தலைமை மஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது. இதற்கு மத்தியில், மக்களவைத் தேர்தலில் செஞ்சி தொகுதியில் திமுக கூட்டணிக்கு வாக்கு சரிந்தது மஸ்தான் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் மூத்த அமைச்சரான பொன்முடி உடனான உறவு மக்களவைத் தேர்தலுக்குப் பின் வெகுவாக குறைந்தது. இதே குழப்பச் சூழல் நீடித்தால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் களப்பணியாற்றும் போது மேலும் சிக்கல் உருவாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் திமுக தலைமை மஸ்தானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.