சென்னை: திமுக பவளவிழா நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீஸார், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது ஏன், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என்று சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு,ஆண்டுதோறும் அந்த அமைப்பு சார்பில் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அக்டோபர் 6-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்ககோரி உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்:
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேஎம்டி. முகிலன்: தமிழகத்தில் மொத்தம் 58இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதிகோரப்பட்ட நிலையில், 42 இடங்களில் அனுமதி தரப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி கோரப்பட்டதால், பாதுகாப்பு கருதி 16 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், ஜி.கார்த்திகேயன், என்.எல்.ராஜா, பால்கனகராஜ்: போலீஸார் அற்ப காரணங்களை கூறி பல இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி வழங்கிய இடங்களிலும் நேர கட்டுப்பாடு உட்பட பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சட்டவிரோத அமைப்புகள் உட்பட எல்லா அமைப்புகளுக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி போலீஸார் அனுமதி தருகின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ் என வந்துவிட்டால் மட்டும் ஆளுங்கட்சியினர் அரசியல் ரீதியாக போலீஸாருக்கு அழுத்தம் தருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசும், போலீஸாரும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர். மற்ற மாநிலங்களில் தாலுகா வாரியாக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்ற படியேறி போராட வேண்டியுள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு வழங்க இயலாது என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, விண்ணப்பித்த அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியதாவது: இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை காவல் துறை சோதிக்க வேண்டாம். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க முடியாது என ஏற்க முடியாத, அற்ப காரணங்களை போலீஸார் கூறுவது ஏன், இவ்வாறு அனுமதி மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன, ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க முடியாதுஎன பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டும் போலீஸார், திமுக பவளவிழா நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி?
ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 42 இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும், அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும் முடிவெடுத்து போலீஸார் அக்டோபர் 1-ம் தேதி (இன்று) தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்று தள்ளிவைத்தார்