திருநெல்வேலி: சிறு வயதிலேயே இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு புகைப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப் பட்டு வருகிறது. உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இதையொட்டி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இதயவியல் பிரிவு சார்பாக உலக இதய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் முன்னிலை வகித்தார். இதயவியல் சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் எட்வின் வரவேற்றார். மூளை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் சரவணன், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்தர், செவிலியர் பயிற்றுநர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள், பி.எஸ்.சி பாரா மெடிக்கல், மருத்துவ பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்குப்பின் மூத்த இதய நோய் வல்லுநர் டாக்டர் சென்னியப்பன் தலைமையில், இதய நோய் பற்றி அறியும் இ சி ஜி குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
» தேனியில் பூ விவசாயம் மும்முரம்: நவராத்திரி விழாவின் போது விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!
» சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள் @ திண்டுக்கல்
இந்த கருத்தரங்கில் துறை தலைவர் பேசியதாவது: உலக இதய தினத்தின் இந்த ஆண்டின் கருப்பொருள் "செயலுக்கு இதயத்தைப் பயன்படுத்து" என்பதாகும். இதய பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை போலவே, இதய பாதிப்பு ஏற்படுவோர் வயதும் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் முதலானது புகைப் பழக்கம். இப்பழக்கத்தால் ரத்த நாளங்கள் எளிதில் சுருங்கிவிடும். மேலும் ரத்த உறைதல் தன்மையை அதிகரிக்கும். அடுத்த காரணம் மன அழுத்தம். மனநல மருத்துவரை நாடுவதில் இருக்கும் தயக்கம் காரணமாக, பல நேரங்களில் மன அழுத்தத்திலேயே மக்களுக்கு இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாக வருகிறது.
மாறுபட்ட வாழ்க்கை முறை 3-வது காரணம். அதிகப்படியான மாசுக்காற்று, துரித உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை போன்றவையாவும் இதயத்தை மேலும் பலவீனமாக்குகின்றன. அடுத்து சீரற்ற ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, அதிக உடல் பருமன், கொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பதும் இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஆதலால், அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றுவது மிகவும் அவசியம்" என்று துறை தலைவர் கூறியுள்ளார்.