‘அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது’ - புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற சீமான் கோரிக்கை!

By வீரமணி சுந்தரசோழன்

அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டத்தையும், சனநாயகத்தையும் பாதுகாக்கப் போராடும் சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) பாரதிய நியாய சங்கிதா (BNS) எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை(CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சங்கிதா (BNSS), எனவும், இந்திய ஆதாரச்சட்டத்தை (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) எனவும் மதவாத பாஜக அரசு இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளது, அண்ணல் அம்பேத்கர் இயற்றிய ‘சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவுக்கு முற்றிலும் எதிரானதாகும். அரசியலமைப்புச் சாசனத்தின் முதல் உறுப்பு இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுக்கிறது. பன்மைத்துவம்தான் இந்திய நாட்டின் அடிப்படை ஆதார அலகு. அதனைச் சிதைத்தழித்திடும் வகையில், இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக நிலைநிறுத்தத் துடிப்பது இந்துராஷ்டிராவை நிறுவத் துடிக்கும் சதிச்செயலின் செயல்வடிவமேயாகும்.

புதிய குற்றவியல் சட்டங்கள்

இந்தியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், தன்னிச்சையாகப் புதிய குற்றவியல் சட்டங்களை மோடி அரசு நடைமுறைப்படுத்தியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். புதிய குற்றவியல் சட்டங்களை அதிகார வர்க்கம் தங்களுக்குச் சாதகமாக எளிதாக வளைத்து, அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக முறைகேடாகப் பயன்படுத்தும் வகையில் குற்றவியல் சட்டங்களின் பல பிரிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடு உடையதாகவும் தெளிவற்றதாகவும் உள்ளது.

தேசத்துரோகக் குற்றச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக, 'இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிப்பது' என்ற பொருள் படும்படியான வார்த்தைகளில் புதிய குற்றச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தனக்கு எதிராக யார் பேசினாலும் அவற்றை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என திசைதிருப்பி கருத்து சுதந்திரத்தை எளிதாக நசுக்க முடியும். மேலும், எளிய மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டங்களைக்கூட, அரசுக்கு எதிரான கலகமாகக் கட்டமைத்து, போராடுபவர்களைக் கைதுசெய்வதோடு, போராட்டங்களை அடக்கி ஒடுக்கவும் முடியும். தேசத்துரோகக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்படலாம் என்று இருந்த நிலையை மாற்றி இப்போது அதிகபட்சமாக ஆயுள்தண்டனைவரை விதிக்கப்படலாம். இவற்றிலிருந்து "தேசத்துரோக சட்டத்தை நீக்கிவிட்டு, மாற்றுப்பெயரில் அதைவிடக் கடுமையான சட்டத்தைப் பாசிச பாஜக அரசு கொண்டுவந்துள்ளது என்பது உறுதியாகிறது.

பயங்கரவாதச் சட்டப் பிரிவுகளின் கீழ் இருந்த கடுமையான பிரிவுகள், புதிய சட்டத்தின் படி குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு பயங்கரவாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டவர் மட்டுமே தாங்கள் நிரபராதி என்பதைத் தாங்களே நிரூபிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதையே அநீதி என எதிர்த்துவந்த நிலையில், தற்போதைய புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டாலே, தாம் நிரபராதி என்பதைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என்பது சனநாயகத்திற்கு மட்டுமல்ல அடிப்படை மனித உரிமைகளுக்கே முற்றாக எதிரானதாகும்.

அதுமட்டுமின்றி, புதிய சட்டங்கள் காவல் துறைக்கு வழங்கியுள்ள கூடுதல் அதிகாரங்கள் அவர்களை அங்கீகரிக்கப்பட்ட கூலிப்படையாக்கியுள்ளது. காவல்துறை கைதுசெய்யும்போது கைதிகள் மீது தாக்குதல் தொடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை விரும்பினால், விசாரணைக்கு முன்பே அவர்களின் சொத்துகளையும் முடக்க முடியும். மேலும், ஒருவர் கைதுசெய்யப்பட்டால், 15 நாட்களுக்குள் காவல் துறையினர் நீதிமன்றத்தை அணுகி காவல்துறை விசாரணைக்கு அனுமதிப்பெற வேண்டும் என்ற முந்தைய விதி மாற்றப்பட்டு, தற்போது அக்கால இடைவெளி 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது அப்பட்டமான அரச வன்முறையாகும். இதன் மூலம் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் எவர் மீதும் பழி வாங்கும் போக்குடன் பொய் வழக்கு புனைந்தாலே குறைந்தபட்சம் 60 நாட்கள் பிணை கிடைக்காமல் தண்டிக்க முடியும்.

அதோடு, இச்சட்டம் ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, காவல்துறைக்கு 14 நாட்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்குவதால், 14 நாட்கள் வரை முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யாமல் இருக்கவும் வழிவகுக்கிறது. இது ஒரு குற்றம் நடந்ததாகப் புகார் வந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு முரணாக இயற்றப்பட்டுள்ளது. மேலும், தலைமைக் காவலர் மட்டத்திலான காவலர் ஒருவரே, பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் எவரையும் கைதுசெய்ய முடியும். "குற்றம்சாட்டப்பட்டவருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, அவருடன் விவாதிப்பது, ஒரு தேநீர் அருந்துவதுகூட குற்றமாகக் காண்பிக்க முடியும் என்பது நாம் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயத்தை எழுப்புகிறது. எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே பலரும் இக்கொடுஞ்சட்டப்பிரிவைப் பயன்படுத்திக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படலாம்.

ஆகவே, அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்' என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE