ரூ.2.5 கோடி மதிப்பிலான இடத்தை ரூ.8 லட்சத்துக்கு கேட்டு மிரட்டல்... முன்னாள் பாஜக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது

By கே.காமராஜ்

தொழிலதிபரைக் கடத்தி அவரது சொத்துப் பத்திரம், கார் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாக முன்னாள் பாஜக நிர்வாகிகள் இருவர் உட்பட 3 பேரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன். இவருக்கு சொந்தமாக தாராபுரம் - பழனி சாலையில் 35 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகியான ஹரி பிரசாத் என்பவருக்கு இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பதற்கு பேசி முடிக்கப்பட்டது. ஹரி பிரசாத் நிலத்தை வாங்க 8.25 லட்சம் ரூபாய் பணத்தை தரணிதரனிடம் கொடுத்த நிலையில், மீதி பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மீதிப் பணத்தை கொடுக்காமல் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்க தரணிதரனை, ஹரி பிரசாத் மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

நிலத்தை அபகரிக்க நில உரிமையாளரை கடத்திய மூவர் கைது

மேலும் தரணிதரனை தாராபுரத்தில் இருந்து கோவை அழைத்து வந்து, ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து அவரிடம் இருந்து வீட்டுப் பத்திரம், கார், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக தரணிதரன் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கூட்டுச் சதி உட்பட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தாராபுரத்தை சேர்ந்த ஹரி பிரசாத், கோவையை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் மற்றும் ஜான்சன் என்ற இருவரை தேடி வருகின்றனர்.

கோவை பந்தய சாலை காவல் நிலையம்

கைது செய்யப்பட்ட தாராபுரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் கோவையை சேர்ந்த பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள் என்பதும், பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவதும் குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், இன்று காலை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE