ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

By வ.வைரப்பெருமாள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பில் 120 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில் வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கூடுதல் பதக்கங்களை வெல்ல இந்திய விளையாட்டுத் துறை, வீரர்களை தயார்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று சந்தித்து கலந்துரையாடினர். அப்போது பிரதமர், அவர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகளில் சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, பேட்மிண்டனில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, குத்துச்சண்டை உலக சாம்பியன் நிகாத் ஜரீன் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளை பிரதமருடன் ஆர்வமாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒலிம்பிக்கிற்காக பாரீஸ் செல்லும் நம் வீரர்களுடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணங்களும், வெற்றிகளும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE