கட்சியில் மீண்டும் சேர ஜானகி போல் சசிகலாவும் செயல்பட வேண்டும்... எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

By கே.காமராஜ்

கட்சியில் மீண்டும் சேர ஜானகி போல் சசிகலாவும் செயல்பட வேண்டும் எனவும், அண்ணாமலை வந்த பின்னர் பாஜக வளர்ந்துள்ளது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கெனவே காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போன்ற மாயத் தோற்றத்தை அவர் உருவாக்கி வருகிறார். இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்ட நிலையில், ஒரு லட்சம் வாக்குகள் அதிமுகவை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி அந்த கட்சி வளர்ந்துள்ளது என கூற முடியும்? அதன் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், “ தினம்தோறும் பேட்டி மட்டுமே அண்ணாமலை கொடுத்து வருகிறார். மற்ற கட்சிகளை பற்றியே பேசி வருகிறார். எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார். 100 நாளில் 500 வாக்குறுதிகள் என பொய் சொல்லித் தான் வாக்கு பெற்றுள்ளார். உண்மையை சொல்லி வாக்குகளைப் பெறவில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை செய்வாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்“ என்றார்.

அண்ணாமலை- சசிகலா

தொடர்ந்து பேசிய அவர், ”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அதிமுக வாக்குகளை கேட்பது அவரவர் விருப்பம். அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது. விலகியவர்களை உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்ள அதிமுகவிற்கென விதிமுறைகள் உள்ளது.

அதிமுக முன்பு பிரிந்த போது, ஜானகி அவர்கள் வெளியிட்ட அறிக்கை போல் கட்சி தலைமைக்கு உடன்பட்டு செயல்படுவேன் என சசிகலா கூற வேண்டும். மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE