செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இதில் அரசுப் பேருந்தின் முன் பக்கம் சேதம் அடைந்த நிலையில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து போலீஸார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.