சேலம், தாதகாப்பட்டியில் அதிமுக நிர்வாகி வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் திமுக பிரமுகர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகரம், கொண்டலாம்பட்டி அதிமுக பகுதிச் செயலாளர் சண்முகம் (54). இவர் நேற்று இரவு தாதகாபட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேற்று நள்ளிரவு, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
சேலம் மாநகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘தெரு விளக்குகளை அணைத்தும், சிசிடிவி கேமராக்களை உடைத்தும் கொடூரமான முறையில் இந்த படுகொலையை செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தனிப்படை போலீஸார் இந்த கொலையில் தொடர்புடைய, திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் (48), அருண்குமார் (28), முருகன் (23), பாபு (45), சீனிவாசன் (25), பூபதி (25), கருப்பண்ணன் (எ) சந்தோஷ் (31), கவுதமன் (33), நவீன் (25) ஆகிய 9 பேரை கைது செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனையில் தொடர்புடைய சதீஷ் குறித்து சண்முகம் போலீஸில் தகவல் தெரிவித்ததால், அவரை கூலிப்படை மூலம் சதீஷ் கொலை செய்துள்ளதாக சண்முகத்தின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.