ஆக்கிரமிப்பு எனக் கூறி பட்டா நிலத்தில் உள்ள வீட்டை இடிக்க முயற்சி: கும்மிடிப்பூண்டியில் இளைஞர் தீக்குளிப்பு

By வ.வைரப்பெருமாள்

கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பு எனக் கூறி, வீட்டை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதை கண்டித்து, இளைஞர் தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பட்டா நிலத்தில் உள்ள இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், ராஜ்குமாரின் வீட்டை இடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளித்த ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போலீஸார்

இதற்கு ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டிற்குள் இருந்தபடி, மண்ணெணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தவாறு வெளியே ஓடிவந்தார். அங்கிருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தீப்பிடித்து எரிந்தவாறு ராஜ்குமார் அங்கும் இங்கும் ஓடினார்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு ராஜ்குமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்ற சம்பவம்

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதற்கிடையே இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஆளும் திமுக அரசு மீது சமூக வலைதளத்தில் பலரும் ஆவேசமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து இளைஞர் தீக்குளித்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE