உ.பியில் 121 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம்... சாமியார் போலே பாபா கருத்தால் சர்ச்சை!

By வ.வைரப்பெருமாள்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சமூக விரோதிகளின் சதி என சாமியார் போலே பாபா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை , நாராயண் சாகர் ஹரி என்ற சாமியார் போலே பாபா ஆன்மிக நிகழ்ச்சிக்கு (சத்சங்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதைவிட, கூடுதலாக சுமார் 2.5 லட்சம் பேர் வரை வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தது புறப்பட்ட போலே பாபாவிடம் ஆசி பெற, அவரது வாகனத்தை சூழ்ந்த மக்களால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 121 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித் துறை விசாரணைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் சமூக விரோதிகளின் சதி என சாமியார் போலே பாபா கூறியுள்ளார். அவரது வழக்கறிஞரும் இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

போலே பாபா தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் இது தொடர்பாக கூறுகையில், “போலே பாபா ஒருபோதும் தனது பக்தர்களை காலில் விழுந்து ஆசி பெற அனுமதித்தது இல்லை. எனவே, கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசல் சமூக விரோத சக்திகள் தீட்டிய சதி. அசம்பாவிதங்கள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன" என்றார்.

நிகழ்ச்சியை முறையாக திட்டமிடாமல், பலர் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டு, சமூக விரோதிகள் சதி என கூறிய, போலே பாபாவின் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE