கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா: அடுத்த குறி இவர்களுக்குத் தான்!

By கவிதா குமார்

கோவை மாநகர மேயர் கல்பனா, நெல்லை மாநகர மேயர் பி.எம். சரவணன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில் மேலும் திருநெல்வேலி, தாம்பரம், மதுரை உள்ளிட்ட பலர் ராஜினாமா செய்வார்கள் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2022 பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற 20 மாநகராட்சிகளில் திமுக மேயர்கள் தான் செயல்பட்டு வந்தனர்.

கல்பனா

இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயரான கல்பனா, நெல்லை மாநகர மேயர் பி.எம். சரவணன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் ஆதரவோடு மேயரான கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இவருடைய தலையீடு மாநகராட்சியில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளர், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் மோதல் போக்குடன் செயல்பட்ட மேயருக்கும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கும் முட்டல், மோதல் இருந்துள்ளது.

பி.எம். சரவணன்

அத்துடன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பாஜக அதிக வாக்குகளை வாங்கியது கல்பனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கல்பனா கடிதம் வழங்கியுள்ளார்.

இதே போல நெல்லை மாநகர மேயர் பி.எம். சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கியுள்ளார். இவர்கள் மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை அமைச்சர் கே.என்.நேரு முதல்வரிடம் வழங்கியதன் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் பதவியில் இருந்து தூக்கப்பட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இன்னும் பல மேயர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள் என்று கூறும் திமுகவினர் திருநெல்வேலி, தாம்பரம், மதுரை என அந்த பட்டியல் நீண்டது என்று கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE