முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன் - ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

By வீரமணி சுந்தரசோழன்

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார்.

ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார். பின்னர் அவர் பிர்சா முண்டா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக முதலமைச்சர் சம்பா சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது.

ஹேமந்த் சோரன்

இந்த கூட்டத்தில் ஜேஎம்எம் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து முதல்வர் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க ஹேமந்த் சோரான் ஆளுநரிடம் கோரியுள்ளார். அதற்காக இந்தியா கூட்டணி எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதமும் ஆளுநரிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE