'நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை ஆகிப்போச்சு' - ஆர்.எஸ்.பாரதி மீண்டும் சர்ச்சை பேச்சு

By வ.வைரப்பெருமாள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை ஆகிப் போச்சு" என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ- எழிலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வை கண்டித்து திமுக போராட்டம்

இப்போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நிகழ்வில் அவர் பேசுகையில், “மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான். நான் வக்கீல், எழிலரசன் பி.இ., பி.எல். இதெல்லாம் எங்களுக்கு குலப்பெருமை, கோத்திர பெருமையால் வந்ததா? இந்த இயக்கம் (திமுக) போட்ட பிச்சை.

இதை வெளிப்படையாகவே நான் சொல்கிறேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனில் ஜி.ஓ. (Communal G.O.) இல்லையென்றால் இத்தனை டாக்டர் போர்டுகள் தொங்காது. நான் பட்டம் பெறுகிறபோது, ஒரு பி.ஏ. பட்டம் பெற்றால், பெயிண்டரிடம் சொல்லி, போர்டு எழுதி மாட்டிக்கொள்வார்கள்.

ஆர்.எஸ்.பாரதி

காரணம் என்னவென்றால் ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. படித்தவர் தான் இருப்பார். இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிற நிலை ஆகிப் போச்சு நம்ம ஊரில். யாராவது எங்காவது போர்டு வைத்திருக்கிறீர்களா? யார் வீட்டிலாவது பி.இ./ பி.ஏ.-ன்னு போர்டு தொங்குகிறதா? இத்தகைய வளர்ச்சிக்கு யார் காரணம்?” இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.

ஆர்.எஸ்.பாரதி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாவது உண்டு. அந்த வகையில் பட்டம் வாங்கியவர்கள் குறித்து இன்று அவர் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE