கோவை மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ராஜினாமா - திமுகவில் சலசலப்பு!

By வீரமணி சுந்தரசோழன்

கோயம்புத்தூர் மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் கொடுத்ததை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு உறுதிப்படுத்தியுள்ளார்

கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். கோவையின் முதல் பெண் மேயராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். கல்பனா கோவை மேயராக பதவியேற்று முதலே பல்வேறு சலசலப்புகள் கட்சியினர் மத்தியில் நிலவி வந்தது. இதற்கு இவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை.

கல்பனா ஆனந்தகுமார்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கல்பனாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திமுகவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, டெண்டர் ஒதுக்கீடு உட்பட நிர்வாக ரீதியாகவும், மேயர் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து திமுக தலைமை அழைத்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கல்பனா ஆனந்தகுமார்

இந்நிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர் மூலமாக ஆணையரிடம் வழங்கியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே அதிமுக கவுன்சிலர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE