நடிகர், தவெக தலைவர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மருத்துவமுகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் தொகுதி வாரியாக பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். இதன் முதல் கட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டம் இன்று திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டத்தில் நடந்த நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பு பற்றி வலியுறுத்திய விஜய் இரண்டாம் கட்ட நிகழ்வில் பேசமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்றும் மாணவர்களுக்கு அது தேவையில்லை என்றும் நீட் தேர்வு விலக்குக்கு குரல் கொடுத்தார்.
முதல் கட்டம் போலவே, இரண்டாம் கட்டத்திலும் அரங்கத்திற்கு செல்ஃபோன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. குடிநீர், பிஸ்கட் இதோடு ரோஜா கொடுத்தும் மாணவர்களை வரவேற்றனர். கடந்த முறை, மாணவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டது.
இதை எல்லாம் மனதில் வைத்து இந்தமுறை, நிகழ்வு நடக்கும் அரங்கில் தவெக சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதோடு நிகழ்வுக்கு வந்திருப்பவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.