ஓசியில் வேர்க்கடலை கேட்டு வேலைக்கு வேட்டு வைத்துக் கொண்ட உதவி காவல் ஆய்வாளர்!

By வ.வைரப்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டாணி கடைக்காரரிடம், ஓசியில் வேர்க்கடலை கேட்டு தகராறில் ஈடுபட்ட, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ராஜன் பிரேம்குமார் என்பவரது பட்டாணி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ராஜன் பிரேம்குமாரின் மகன் ஷாம் ஆஸ்பாஷ் கடையில் இருந்துள்ளார்.

சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

அவரிடம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வறுத்த வேர்க்கடலை கேட்டிருக்கிறார். அதற்கு ஷாம் ஆஸ்பாஷ், எவ்வளவு ரூபாய்க்கு வேர்க்கடலை வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், உதவி காவல் ஆய்வாளரான என்னிடமே காசு கேட்கிறாயா என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜன் பிரேம் குமார் கடைக்கு வந்தார். அப்போது மேலும் இரண்டு போலீஸாரை அழைத்து வந்து, ராதாகிருஷ்ணன், ராஜன் பிரேம்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கம் காவல் நிலையம்

இந்நிலையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சிகள் பதிவாகின. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ராஜன் பிரேம்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் ஆணையர் காமனி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE