கனமழையால் கார் கவிழ்ந்து 5 பேர் பலி... சுற்றுலா வந்த இடத்தில் சோகம்!

By கவிதா குமார்

தெலங்கானாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களின் கார் மும்பையில் கனமழையால் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயதுக்கு மேற்பட்ட 6 பேர் காரில் சுற்றுலாவுக்காக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்திருந்தனர். மும்பையில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று இரவு அவர்கள் தெலங்கானாவிற்கு மீண்டும் செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த கார் புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பிக்வான் போலீஸ் எல்லைக்குட்பட்ட தலாஜ் கிராமம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரின் முன் பகுதி முற்றிலும் உடைந்து நொறுங்கியது. இதனால் காருக்குள் இருந்த 6 பேரும் சிக்கிக் கொண்டனர்.

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காரில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை வெளியே மீட்ட போது ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. படுகாயத்துடன் இருந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து காவல் அதிகாரி கூறுகையில், "மும்பையில் சுற்றுலா முடிந்து 6 பேரும் காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கனமழைக்கு இடையே வழுக்கும் சாலை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வேகமாக வந்த கார் வடிகால் குழிக்குள் கவிழ்ந்துள்ளது. காரில் இருந்த ஆறு பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE