உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் அலைமோதிய கூட்டம்... 122 பேர் உயிரிழக்க காரணம் என்ன?

By கவிதா குமார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் 122 பேர் பலியான விவகாரத்தில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்ததே விபத்து ஏற்படக் காரணம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் வரும் மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் உறவினர்கள்

இந்த சம்பவத்திற்கு கூட்ட நெரிசலே காரணம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிக்கந்தர ராவ் காவல் நிலைய மூத்த அதிகாரி அனிஷ் குமார் கூறுகையில், பந்தல் அமைக்கப்பட்ட இடங்களைத் தாண்டி, திறந்த வெளியில் மக்கள் நின்றதனால் அதிக வெப்பம் மற்றும் புழுக்கத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இதில் மயக்கமடைந்தவர்கள் சிகிச்சை எடுக்க தாமதமாகியுள்ளது. இது இறப்பிற்கு வித்திட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே நெரிசல் ஏற்படக் காரணம் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் எடா மாவட்ட எல்லையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனைக்கு சிலரும், அலிகார் மருத்துவமனைக்கு சிலரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர (சிக்கந்தர ராவ் பகுதி) மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி

மேலும், உயிரிழந்தோரின் உடல்களை மருத்துவமனை நிர்வாகம் தரையிலேயே போட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE