சேதமடைந்த நிலையில் கோவை அகதிகள் முகாம் வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது, அங்கிருந்து வந்த தமிழ் அகதிகளுக்காக கடந்த 1990-ம் ஆண்டு, அரசு சார்பி்ல் இந்த முகாம் அமைக்கப்பட்டது. இம்முகாமில் கடந்த 34 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது இக்குடியிருப்புப் பகுதியில் 264 இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 730 பேர் வசித்து வருகின்றனர். இம்முகாமில் உள்ள பல வீடுகள் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் கடந்து விட்டதால் பழுதடைந்து காணப்பட்டுகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையின் காரணமாக, இம்முகாமில் உள்ள பழமையான வீடுகள் மேலும் சேதமடைந்துள்ளதாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "இங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள், ஓடுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. மழை பெய்தால் மழைநீர் வீட்டுக்குள் ஒழுகுகிறது. சில வீடுகளில் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே, இக்குடியிருப்பு வளாகத்தில் சேதமடைந்து காணப்படும் வீடுகளை சீரமைத்துத் தர அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE