அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஏமாற்றம்: சிபிஐ-க்கு நோட்டீஸ்; வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By வ.வைரப்பெருமாள்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது வழக்கில், 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜ்ரிவாலை, கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ-யும் இதே வழக்கில் கைது செய்தது.

ஏற்கெனவே, அமலாக்கத் துறை கைது நடவடிக்கையிலிருந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில் தற்போது சிபிஐ-யும் கைது செய்ததால் கேஜ்ரிவால் உச்சநீதிமன்ற ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

இதற்கிடையே, இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும், தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது தொடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சிபிஐ விசாரணை

முன்னதாக, இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ தன்னை கைது செய்தது நியாயமற்றது எனவும், ஜூன் 4-க்குப் பிறகு சிபிஐ எந்த புதிய ஆதாரத்தையும் வழங்கவில்லை.

விசாரணையின்போது தன்னிடம் பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்வது சட்டப் பூர்வ ஆதாரம் அல்ல எனவும் கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE