தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம்... நடத்துநர் உட்பட இருவர் சஸ்பெண்ட்

By கே.காமராஜ்

தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரத்தில் நேரக் காப்பாளர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இன்று காலை பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால் பேருந்தை எடுக்க தாமதப்படுத்தியதோடு அனைவரையும் இறங்கி செல்லுமாறு பேருந்து நடத்துநர் யேசுதாஸ் என்பவர் கூறியதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இதையடுத்து செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் இந்த செயல் காரணமாக உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியதோடு, ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட பணியாளர்கள்

இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேரக் காப்பாளர் ராஜா மற்றும் பேருந்து நடத்துநர் யேசுதாஸ் ஆகிய இருவரை பணியிடை மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE