சென்னை அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகர குளிர்சாதன பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு சென்ற அரசுப்பேருந்தில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழிட எண் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று வழக்கம் போல இந்த வழித்தடத்தில் இயங்கிப்பட்ட சென்னை மாநகர குளிர்சாதனப் பேருந்து ஒன்று அடையாறு எல்.பி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரெனெ தீ பிடித்தது.
அடையாறு டெப்போ அருகே வந்த போது கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து புகை வந்ததை நடத்துநரும், ஓட்டுநரும் கவனித்துவிட்டு, உடனடியாக பயணிகளை இறங்குமாறு அறிவுறுத்தினர். பயணிகள் இறங்கிய சற்று நேரத்தில் பேருந்து தீப் பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சி அளித்தது.
தீ விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பேருந்தில் பற்றிய தீயை அணைக்கப் போராடினர். ஆனால், அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது, பின்னர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து பேருந்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. உரிய நேரத்தில் பயணிகள் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.